புதன், 25 ஏப்ரல், 2018

ராக்கி - விதியின் விளையாட்டு

ஸ்டாலின் அப்போது தான் டியூசனுக்கு புதிதாக வந்து சேர்ந்தான். அவன் தம்பி எங்களுடைய க்ளாஸ் மேட். இவன் ஒரு வருடம் பள்ளி செல்லாததால் எங்களுடன் படிக்க வேண்டியிருந்தது. பதினொன்றாவது படித்துக் கொண்டிருந்தோம். வேற ஸ்கூலாக இருந்ததால் டியூசன் டைமில் மட்டுமே ஸ்டாலினை பார்க்க முடிந்தது. ஆரம்பத்தில் அவன் யாருடனும் ஒட்டவில்லை. நல்ல கலராக ,, சாந்தமாக இருந்தாலும் அவனின் ஆறடி உயரம் பார்த்தாலே பயமுறுத்தும்.

கொஞ்ச நாள் போக போக எல்லாரிடமும் ஐக்கியமாகி விட்டான். அவன் என் தோழி ஒருத்தியை சைட் அடிப்பதாகவே வெகு நாட்கள் நினைத்து அவளை கலாய்த்துக்கொண்டிருப்போம். அம்மாவுக்கு ஏனோ ஸ்டாலினை கண்டாலே ஆகாது. கூட படிக்கும் எல்லாருமே வீட்டுக்கு வந்து போவது சகஜம். லீவு நாட்களில் மணிக் கணக்கில் அரட்டை அடித்துக் கொண்டிருப்போம். ஒரு முறை அவனும் வீட்டுக்கு வந்த போது அம்மாவுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. அவனிடம் பேச கூடாது என்று ஆர்டர் போட்டு விட்டார்.

என்றாலும் அதன் பின் தான் அவனிடம் எல்லாருமே க்ளோஸ் ஆகி விட்டோம். இதில் நான் அவனை அண்ணனாகவே தத்து எடுத்து விட்டேன். ஆனாலும் பேர் சொல்லித்தான் அழைப்பது வழக்கம். அவன் ஏனோ கொஞ்ச நாளாகவே சோகத்தில் இருந்தான் . ஒரு முறை தண்ணி அடித்தாக கேள்விப்பட்டு ஒரு மணி நேரம் அட்வைஸ் செய்தேன். எதுவுமே பேசவில்லை ஸ்டாலின். அவன் என் தோழியை ப்ரப்போஸ் செய்யும் நாளுக்காக காத்துக் கொண்டிருந்தேன்.

அந்த வருடம் ரக்ஷாபந்தன் வந்தது. வழக்கமாய் பத்து பதினைந்து பேர் சேர்ந்து ஸ்கூலுக்கு நடந்து போவது தான் வழக்கம். அன்று ஏனோ ரமேஷும் நானும் மட்டுமே சேர்ந்து போனோம். ரமேஷ் தங்கச்சியின் க்ளாஸ்மேட். ஸ்டாலினுக்கு பக்கத்து வீடு. என்றாலும் ஒரே டியூசன், ஒரே க்ரூப் என்பதால் எல்லா விஷயங்களுமே சகஜமாக பேசிக் கொள்வோம். அன்றும் அப்படித்தான் ஊர்க்கதை எல்லாம் பேசிக் கொண்டே ரக்சாபந்தனுக்கு வந்தோம். “டேய் இன்னிக்கு நைட் எங்க அண்ணனுக்கு ராக்கி கட்டி விடப் போறேன் ” என்ற போது “அது யாரு ராக்கி கட்டி விடற அளவு உனக்கு அண்ணன் ? என்றான் ரமேஷ்

“ஸ்டாலின் தாண்டா என்று நான் சொன்னபோது அப்படியே நின்று விட்டான். “அக்கா நா சொல்லக் கூடாதுன்னு பாத்தேன். ஆனா வேற வழி இல்லாம சொல்றேன். தயவு செஞ்சு நீ அவனுக்கு ராக்கி கீக்கி கட்டிராதே. அவன் உன்னைய தான் லவ் பண்ணான். நீ ஒத்துக்க மாட்டேன்னு தெரிஞ்சு தா வெக்ஸ் ஆகி அன்னிக்கு தண்ணி போட்டான். நீ ஓகே சொல்லலன்னாலும் பரவால. அண்ணானு மட்டும் சொல்லிறாதே அவன் பாவம்கா!!! என்றான் ரமேஷ் .

தூக்கி வாரி போட்டது எனக்கு. அவனை அதுவரை அப்படி நினைத்துப் பார்த்ததே இல்லை. இனி அவனிடம் எப்படி நார்மலாக பேசுவது என்று குழப்பமாக இருந்தது. தோழியிடம் சொன்ன போது எனக்கு அப்பவே கொஞ்சம் டவுட் இருந்ததுடி. நீ டியூசன் லீவுன்னு தெரிஞ்சா அவனும் வர மாட்டான். ஒவ்வொரு புது நோட்டு வாங்கும் போதும் உன்ன தான் பேரெழுதி தர சொல்றான். சரி இப்ப நீ என்ன தான் சொல்ற என்றாள்.

“‘ இல்லடி என்னால ஒத்துக்கவே முடியாது. அது எப்படி ஒருத்தர அண்ணான்னு நினைச்சு பேசிட்டு மாத்த முடியும்? ஒருத்தர எப்படி முதல்முதலா நினைச்சு பழகுறனோ அப்படித் தான் காலம் பூரா இருக்க முடியும். என்னோட பழக்கத்த என்னால மாத்த முடியுதுடி ” என்று மறுத்து விட்டேன்..

அதன் பின் அவன் கண் பார்த்துப் பேச முடியவேயில்லை.

திருமணத்துக்கு பின் ஒரு முறை பார்க்க நேரிட்ட போது பரஸ்பரம் நலம் விசாரித்து கொண்டோம். அவனுக்கு இப்போது திருமணமாகி ஒரு குழந்தை இருக்கிறது!

அவன் குடித்துப் பழகியதற்கு நானும் ஒரு காரணம் என்ற குற்றவுணர்வு இன்றுவரை இருந்து கொண்டே தான் இருக்கிறது!!!

-நிர்மலா கணேஷ்



ஞாயிறு, 11 பிப்ரவரி, 2018

நினைவூட்டும் பால்யம்

அகந்தை, மேல்பூச்சு, பேச்சில் கர்வம் எதுவும் துளியுமில்லாத களையான முகம். சில சமயங்களில் காமம், காதல் எல்லாவற்றையும் தாண்டி நெருக்கமான பந்தத்தை ஏற்படுத்தி கொடுக்கும்.

நேற்றைய பொழுதில் இருசக்கர ஷோரூம் ஒன்றில் அவளை பார்த்தேன். கோஷா அணிந்திருந்தாள். கறுப்பு நிற நட்சத்திரங்கள் பொதிந்த, அழகான வேலைப்பாடுகள் கொண்ட கோஷா. அவளுக்கு அவ்வளவு பொறுத்தமாய் இருந்தது. அவளின் கோதுமை நிற உடலில் கறுப்பு நிற கோஷாவும், வெளீர் நிறத்தில் நீல பூ பதிந்த மேலாடைகளும் அவளை தேவதையாக நிறுத்தியது.

அவளின் ஒவ்வொரு உச்சரிப்பிலும் ஒரு "க்" அல்லது "ஞ்" என முடிவது அவளின் பேச்சினை கேட்க தூண்டியது. தங்க நிறத்திலான அவளின் பற்கள் புன்னகையை வீசியப்படியே இருந்தது. கறுப்பு மையிட்டு இன்னும் அழகாக இருந்தாள்.

வலதும் இடதுமாக விழிகளை உருட்டும் அவள் கண்களில் எதிர்காலம் பற்றியோ நிகழ்காலம் பற்றியோ துளியளவும் கவலைகள் இருந்ததாக தெரியவில்லை. குழந்தைதனமும், மேட்டிமைதனமும் இல்லாத கலவையான முகவெட்டு. இளமை சில சமயம் எவ்வளவு அழகாய் இருக்கிறது.

காகிதத்தை எடுத்து அவள் எழுதும் போது இடக்கையை பயன்படுத்தினாள். எந்தவொரு சுவாரசியமும் ஏற்படுத்தாத அவளின் பேச்சினை மறந்து அவள் எழுதுவதை பார்த்துக் கொண்டு இருந்தேன். எழுத்து அவ்வளவு மோசமில்லை. எண்களில் சுழிப்பை அழகாக்கினாள். வார்த்தைகளில் எழுத்துக்களை அழகாக்கினாள். சூழ்நிலைகள் தானாகவே அழகாக மாறியதாய் தோன்றியது.

இந்த பக்கம் கண்களில் யாரோ ஊடுருவதாய் நினைவு. கனவு கணங்களில் இருந்து நிஜத்திற்கு திரும்பி, என்ன நடக்கிறது என்பதை யூகிக்கிறேன். அம்மு பார்வையால் என்னை அளந்துக் கொண்டு இருந்தாள்.

ஷோ ரூம் விட்டு வெளியே வந்ததும் முதல் கேள்வி அவளிடமிருந்து வந்தது.

"எதற்கு அவளை அப்படி பார்த்த?"

சிரித்துக் கொண்டேன். "சொன்னால் உனக்கு புரியுமா?" என்றேன்.

அமைதியாக பார்த்துக் கொண்டு இருந்தாள். சிறுவயது புகைப்படமொன்றை நினைவூட்டினேன். நாற்காலி ஒன்றில் இடது காலின் மேல் வலது காலை முறுக்கி உட்கார்ந்து இருந்த நிழற்படம். துப்பட்டாவை கழுத்தை லேசாக சுருக்கி இருக்கும். உதடுகளில் புன்னகையும் கண்களில் அசாத்திய நம்பிக்கையும் கொண்ட பார்வையும்... முகம் பூரித்து இருந்ததையும் சொல்லிக் கொண்டு இருந்தேன்.

"இப்போ அதுக்கெல்லாம் என்ன?" என்றாள். வார்த்தைகளில் வெட்கம் கூடி உருண்டு ஓடிக் கொண்டு இருந்தது.

"குழந்தைதனமும், மேட்டிமைதனமும் இல்லாத அந்த முகம் கிரகணத்திற்கு பிறகான அழகான சந்திரன்.  சட்டென யாராவது உன் முகத்தை நினைவுப்படுத்தி விடுகிறார்கள். இந்த நிமிடங்கள் தான் எவ்வளவு அழகானவை. உன் பால்ய நிழற்படத்தை போல" என்றேன்.

திரும்பி நின்று, "நேரமாகிறது போகலாம்" என்றவள் லேசாக சிரித்து வெட்கத்தில் பால்யத்தை தொட்டு இருக்ககூடும்.

-ராஜி

சனி, 10 பிப்ரவரி, 2018

இரவின் கவிதைகள்

அமைதியின் சத்தம் பேரிரைச்சலாய் இருக்கிறது.
வெக்கையின் ஈரம் பாரமாய் இருக்கிறது
நினைவுகளின் காலம் கொடூரமாய் இருக்கிறது

உன் சொற்படி எண்ணிக்கையை ஆரம்பிக்கிறேன்.
ஏறுமுகமாகவும் இறங்குமுகமாகவும் நடத்திய
சிந்தனையில் தறிக்கெட்டு போகிறது
இந்த இரவின் பொழுது.

விழிகள் மூடா இக்கணத்தில்
கைகோர்த்து நடக்கலாம்....
சபித்தே சாகட்டும் கேடுகெட்ட இரவு.

***************
***************
உனக்கு கேட்கிறதா
இந்த இரவின் சப்தம்?
இதோ நகர்கிறான் ஐஸ்வண்டிக்காரன்
இந்த இரவை நகர்த்தியப்படி.

மீன் வாசனை தேடி
நகர்கின்றது பெருத்த பூனையொன்று.
மின்மினிகளும் அலைந்தே திரிகிறது
தூரத்தே குழந்தை அழும் சத்தம்
சற்று உள்வாங்கி கேள்....
சலங்கையோடு வளையலின் சப்தமும்

நிலவை வெறித்த நட்சத்திரங்கள்
பயத்தில் மிரளுகின்றன.
கெளளி சத்தம் சிந்தையை கலைக்கிறது

உனக்கும் கேட்கிறதா
இந்த இரவின் சப்தம்?

வா... இந்த இரவோடு பயணிப்போம்.

*************
*************
என் நந்தவனமெங்கும்
உன் கானகுரலுக்கு காத்திருக்கிறது.
இந்த இரவும், நானும்
விழித்தே இருக்கிறோம்.
விடியலில் ஆதவன் மலரட்டும்.

-ராஜி







புதன், 7 பிப்ரவரி, 2018

மொழிபெயர்ப்பு எழுத்தாளர்கள் எங்கே??

ரஷ்ய, லத்தீன் இலக்கியங்களை மொழிப்பெயர்த்த காலம் போய் ஆங்கில எழுத்தாளர்களின் படைப்புகளை மொழி பெயர்க்கும் காலம் உருவானது. தமிழில் மொழிபெயர்க்கப்படும் படைப்புகள் சொற்கள் ஒன்றாகாமல் பிரித்து தெளிக்கப்படுகிறது. இதை மொழிப்பெயர்ப்பாளரும் நவீன படைப்புகள் என்று வாய்ச்சவடால் அடிக்கிறார்கள். உங்களுக்கு புரியவில்லையா??? நீங்கள் இன்னும் சற்று அதிகமாகவே இலக்கிய வாசிப்புக்கு ஆளாக வேண்டுமென சிலுவையில் ஏற்றுகிறார்கள்.

அன்னிய தேச மொழிகளை விடுங்கள். அண்டை மாநில இலக்கியங்களே மொழிபெயர்ப்பு உட்படுவதில்லை. மலையாளத்திலிருந்து தமிழ் கொஞ்சமாய் மொழிபெயர்க்கப்படுகிறது. மற்ற மொழிகளான தெலுங்கு கன்னட மொழிகளின் படைப்புகள் குறித்து நமக்கு ஒன்றும் தெரிவதே இல்லை. எப்போதாவது ஆளும் அரசு எழுத்தாளரை மறைமுகமாக கொல்லும் போது தவிர ..... அப்போதும் பெயர்களை மட்டுமே தெரிந்துக் கொள்கிறோம். படைப்புகளை அல்ல.

தமிழில் இருந்தும் மற்ற மொழிகளுக்கு படைப்புகள் மாற்றம் செய்யப்படுகிறதா அதுவும் கிடையாது. விருது பெறும் படைப்புகள் மொழி பெயர்க்கப்படுகிறது. வாசிக்க மக்களை சென்றடைகிறதா என்றால் அதுவும் மிகப்பெரிய கேள்விகுறி தான். தமிழில் இருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கிறார்கள். அதுவும் மொழிவளமை இல்லாமல் ஏன் படித்தோம் என்ற அளவிலே இருக்கிறது.

ஒருமுறை வேடிக்கையாக நண்பர் சொன்னார். நீ முதலில் கவிதை என கிறுக்குவதை நிறுத்திவிடு. உன்னை போலவே ஒவ்வொரு வார்த்தையும் பல கவிதைகளாக நொடி பொழுதில் உருமாற்றி எழுத எல்லாராலும் முடியும். அதே போலவே மொழிப்பெயர்ப்புகளுக்கான எழுத்தாளர்களிடம் எவரேனும் ஒரு மேடையில் விளிம்பி இருக்க வேண்டும். மொழிப்பெயர்ப்புகளை கைவிடுங்கள் என்று....

முன்பின் முரணாக இருக்கிறதல்லவா... மொழிபெயர்க்க ஆள் இல்லை/ மொழிப்பெயர்த்தால் படுபிராதையாக இருக்கிறதென.....

தற்போதைய மொழிபெயர்ப்பில் திறமை உள்ளவர்களை பின்னூட்டமிடுங்கள். வாசித்து பார்ப்போம்

-ராஜி.

குறையை நிவர்த்தி செய்யும் K.பாலசந்தர் ஒரு அலசல்

கே.பாலசந்தர் இயக்கத்தில் 1980ல் வெளிவந்த வறுமையின் நிறம் சிவப்பு படத்தில் ஒரு காட்சி:

கமல் சலூன் கடையில் வேலை பார்ப்பார்.  வாடிக்கையாளராக தேங்காய் சீனிவாசன் வருவார்.

என்ன ஜாதி ?

ஷேவிங் க்ரீமை தடவிக்கொண்டே பாரதியார் கவிதை சொல்வார் கமல்.

“ வெள்ளை நிறத்தொரு பூனை ”
 எங்கள் வீட்டில் வளருது கண்டீர்
பிள்ளைகள் பெற்றதப் பூனை
அவை பேருக்கொரு நிறம் ஆகும்

சாம்பல் நிறத்தொரு குட்டி,
கரும் சாந்தின் நிறம் ஓரு குட்டி
பாம்பின் நிறமொரு குட்டி
வெள்ளை பாலின் நிறம் ஓரு குட்டி

எந்த நிறமிருந்தாலும்
அவை யாவும் ஓரே தரம் அன்றோ ”

 ‘பாட்டு நல்லா இருக்கு...யாரு எழுதினது ?”

 “பாரதியார்”

 “ பாரதியார் பாட்டெல்லாம் தெரிஞ்சிருக்கே! என்ன படிச்சிருக்கே ?”

 “ எம்.ஏ சார்” .

  “ எம்.ஏவா !” என எகிறி ஓட்டம் பிடிப்பார் தேங்காய்.

மேலோட்டமாகப் பார்த்தால் நகைச்சுவையாகத் தோன்றும் அந்தக்காட்சியில் கூட எத்தனை அர்த்தம் கற்பித்தார் கே.பி.  படித்த இளைஞர்கள் அரசாங்க வேலைக்கு காத்திராமல் சுயதொழில் செய்யலாம் என்ற ரீதியில் நீங்கள் புரிந்துக் கொண்டால் கே.பியை சரியாக புரிந்து கொள்ளவில்லை எனக்கொள்க. மீண்டுமொருமுறை அந்தப் பிதாமகரின் படைப்புகளை கூர்ந்து கவனிக்கவும்.

தமிழ் சினிமாவின் பிதாமகர்   கே.பி என்று அன்போடு அழைக்கப்படும் கே. பாலசந்தர் தான் இன்றைய முன்னணி நடிகர் / நடிகைகளுக்கு  குருநாதர்.

பாலசந்தர் தஞ்சாவூர் ஜில்லாவை சார்ந்த நன்னிலம் என்னும் குக்கிராமத்தில் பிறந்தவர். இளங்கலை பட்டம் பயின்று ஆட்சியர் பணிக்கு போவார் என்று கனவு கண்ட தந்தைக்கு ஆசிரியர் பணி போதுமானது என்று கனவை முடித்து வைத்தவர். ஏனெனில் கே.பி.யின் கனவு வேறு உலகமாய் இருந்தது.

முத்துப்பேட்டையில் ஆசிரியராய் இருந்தவர். பகுதி நேரமாக நாடகங்களை எழுதி இயக்க ஆரம்பித்தார். இவரது நாடகங்கள் அன்றைய கூட்டு குடும்ப சூழலை, மத்திய வர்க்கத்தினரின் அவலத்தை தைரியமாக மேடையேற்றியது. சில மூட நம்பிக்கைகளை உடைத்து பெண்கல்வி, சமூகத்தில் பெண்களின் பங்கு, குடும்ப சூழலை அனுசரிக்கும் பெண்களின் திறமைகளை துணிச்சலாக வெளிச்சதிற்கு கொண்டு வந்தது.

எம்.ஜி.ஆரின் "தெய்வத்தாய்" படத்தின் வசனகர்த்தாவாக சினிமா துறையில் நுழைந்தவர் நறுக் வசனத்தில் பிரபலமடைகிறார். நகைச்சுவை நடிகராக இருந்த நாகேஷ், கே.பியிடம் நடிக்க வாய்ப்பு கேட்க முழுக்க முழுக்க நாகேஷிற்காக உருவான கதை தான் சர்வர் சுந்தரம். இந்த படத்தில் கதை வசனம் கே.பி எழுத கிருஷ்ணன்-பஞ்சு படத்தை இயக்கினர். 1964ல் ஏ.வி.எம். தயாரிப்பில் வெளிவந்த சர்வர் சுந்தரம் திரைப்படம்  தான் நாகேஷிற்கு பன்முக கலைஞர் என்ற அடையாளமாகவும்,  நாகேஷின் திரைப்பட வாழ்க்கையில் மைல்கல்லாவும் அமைந்தது.

1965ல் தனது நாடகத்தில் மிகவும் வெற்றிப்பெற்ற நாடகமான "நீர்க்குமிழி" யை படமாக இயக்குகிறார். பலவிதமான செண்டிமெண்டுகளை உடைத்த படமது. ஆயிரத்தில் ஒருவன், இதயக்கமலம், எங்கவீட்டுப்பிள்ளை, காக்கும் கரங்கள் போன்ற ஜாம்பாவான்கள் பட வரிசையில் அந்த ஆண்டு வெளியான குறைந்த பட்ஜெட் படம் நீர்க்குமிழி.

படத்தின் பெயரிலிருந்து, கதையின் போக்கு வரை தைரியமாக எடுத்த கே.பி, இறுதிகாட்சியில் திணறி இருப்பார். நாகேஷின் மரணத்தோடு முடிய வேண்டிய படத்தை சிறிது இழுத்து டாக்டர் கேரக்டர் மேற்படிப்பிற்காக வெளிநாடு செல்வதாக முடித்திருப்பார். நாடகத்தை திரைப்படமாக மாற்றியதில் இந்த தடுமாற்றம் இருக்கலாம். ஆனாலும் படத்தில் வசனங்கள், நடிகர்கள் தேர்வு, அவர்களை நடிக்க வைத்த விதம் வெற்றிபடமாக மாற்றியது.

அடுத்தடுத்து வெற்றிபடங்களாக கொடுத்தவர், நடிகர் திலகம் செவாலியர் சிவாஜி கணேசனை வைத்து இயக்கிய படம் எதிரொலி. படம் படுதோல்வியடைந்தது.  சிவாஜி ரசிகர்கள் கே.பியின் வீட்டில் கல்லெறிந்தார்கள். சிவாஜியும்-எஸ்.எஸ்.ஆர்  நடிக்கும் கூட்டணி அப்படத்தோடு முடிந்தது. இசை அமைப்பாளர் கே.வி.மகாதேவனும் அப்படத்தோடு கே.பிக்கு இசையமைப்பதை நிறுத்திக் கொண்டார். எதிரொலி தோல்விக்கு பிறகு பிரபலங்களை இயக்குவதை குறைத்துக் கொண்டு புதுமுகங்களை அறிமுகப்படுத்தி படம் இயக்க ஆரம்பித்தார் கே.பி.

ஆரம்பகாலக்கட்டத்தில் கே.பி படங்களுக்கு இசையமைத்தவர் மெல்லிசை மாமணி வி.குமார் அவர்கள். இவர் கே.பி.யின் நாடகங்களுக்கு இசை அமைத்ததில் இருந்து அவருடனே பயணித்தவர். கிட்டத்தட்ட 9படங்களை இசையமைத்து இருக்கிறார்.    மெல்லிசை மாமணி வி.குமாரின் இசைக்குழுவில் தான் இன்றைய இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தை இசையமைத்துக் கொண்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கே.பி. புதுமை விரும்பி. குசும்பு பிடித்தவர். அவருக்கு சரியான தீனி போட்டது  இசையமைப்பாளர் வி.குமார் தான். பாடல்களுக்கு நடுவே துணிகளை கிழித்து இசையாக்குவது, நாகேஷின் சேஷ்டகளுக்கு ஏற்ப ஏப்பம் விடுவதை தனித்தன்மையாக்குவது என கே.பியின் ரசனைகளுக்கு தீனிப் போட்ட  இசையமைப்பாளர்.

கமல்ஹாசன் அப்போது   கேரக்டர் ஆர்ட்டிஸ்டாக பல படங்களில் நடித்துக் கொண்டு இருக்க, அரங்கேற்றம் படம் மூலம் நல்லதொரு சினிமா வாழ்க்கையை ஆரம்பித்து வைத்தவர் கே.பி. 1973ல் வெளியான அரங்கேற்றம் படத்திலிருந்தே குடும்ப கட்டுப்பாடு பற்றிய விழிப்பு உணர்வை சொல்ல ஆரம்பித்திருந்தார். .

கே.பியிடம் இருந்த இன்னுமொரு நல்லபழக்கம் திறமைவாய்ந்த கலைஞர்களுக்கு வாய்ப்பு குறைவாக கொடுத்ததாக நினைக்கும் நடிகர் / நடிகைகளுக்கு அடுத்த படத்தில் வாய்ப்பு தருவார். ரஜினியையும் அப்படித்தான் கண்டெடுத்தார் பாலசந்தர்.

புன்னகை மன்னன் படத்தில் நடன மாணவனாக நடித்திருந்தவர் ரமேஷ் அரவிந்த். 1986ல் கன்னடத்தில் "சொல்லத்தான் நினைக்கிறேன்" திரைப்படத்தை இயக்கும் போது முக்கிய வேடம் கொடுத்திருந்தார். அந்த திரைப்படத்திற்கு பிறகே கன்னடத்தில் பிரபல கதாநாயகனாக மாறினார் ரமேஷ் அர்விந்த். அழகன் படத்தில் மதுபாலாவின் தோழியாக அறிமுகமானவர் யுவராணி. படத்தின் நீளம் காரணமாக யுவராணி நடித்த பாகங்கள் வெட்டு விழ, ஜாதிமல்லி திரைப்படத்தில் வினித் கதாநாயகனாக நடிக்க, குறும்பான கதாநாயகியாக அறிமுகப்படுத்தப்பட்டார் யுவராணி. அழகன் படத்தில் நந்தகுமார் (விவேக் உடனான நகைச்சுவை காட்சி ஒன்றில் மைனர் குஞ்சுவிற்கு தீர்ப்பு சொல்பவர்) சிறுவேடத்தில் நடிக்க அடுத்த படத்தில் வாய்ப்பளித்தார். கே.பி.கரங்களால் அறிமுகப்படுத்தப்பட்ட   கலைஞர்கள் சோடை போனதாக வரலாறு இல்லை. அதனால் தான் அவர் பீஷ்மர்.

கே.பாலசந்தரின்  மெகா ஹிட்டுகளான அரங்கேற்றம், அபூர்வராகங்கள், மூன்று முடிச்சு, தண்ணீர் தண்ணீர், அச்சமில்லை அச்சமில்லை, மனதில் உறுதி வேண்டும், சிந்துபைரவி படங்களை வைத்தே சினிமாவை எப்படி எடுக்க வேண்டுமென நீண்ட தொடரை ஆரம்பிக்கலாம். ஒவ்வொரு திரைப்படத்திலும் கற்றுக் கொள்ள அவ்வளவு விசயமிருக்கிறது.

கே.பி.யின் படங்களில் வரும் கதாபாத்திரங்கள் வித்தியாசமானதாகவும் ஆச்சரியமானதாகவும் இருக்கும். உதாரணத்திற்கு "புன்னகை மன்னன்" டெல்லிகணேஷ், சிந்துபைரவி ஜனகராஜ், வறுமையின் நிறம் சிவப்பு ஒரு விரல் கிருஷ்ணா ராவ். ஒவ்வொரு படத்திலும் அவரது  கதாபாத்திரங்கள் வெகுஜன மக்களில் ஒருவராய், மிகைப்படுத்தப்படாத கேரக்டராக அமைப்பது கே.பியின் ஸ்பெஷல்.

திரையில் கொடிகட்டிப் பறந்த இவர், தொலைக்காட்சிகள் வீடுகளை ஆக்ரமித்துக்கொள்ள அதிலும் கால்பதித்து வெற்றிகண்டவர். 1990ல் சென்னை தொலைக்காட்சியில் இவர் இயக்கிய "இரயில் சினேகம்" தொடர் பிரசித்தம். அண்ணி, ரகுவம்சம், கையளவு மனசு இவருடைய மேற்பார்வையில் இயக்கிய பரப்பரபான தொடர்களாகும்.  

தெலுங்கில் ஹிட் அடித்த ‘மரோ சரித்ரா’வை ஹிந்தியில் ‘ ஏக் து ஜே கேலியே'வாக ரீமேக் செய்கிறார். படம் அதிரிபுதிரி ஹிட். பாடல்கள், பாலிவுட் மட்டுமின்றி அனைத்து மாநிலங்களிலும் ஒலிக்க, படம் மெகா வசூல். அந்தப் படத்தின் இறுதிக் காட்சி   நாயகனும், நாயகியும் மேலிருந்து குதித்து தற்கொலை செய்துகொள்வதாக இருக்கும். ’காதலில் ஜெயிக்க முடியாதவர்கள் உயிரைக்கூட அந்தக் காதலுக்காக விடுவார்கள்’ என்ற வாய்ஸ் ஓவரும் வரும். 
பல காதல் தற்கொலைகளைப் பற்றிக் கேள்விப்பட்டு, இப்படி ஒரு படமும் அதற்கு காரணமாக இருந்தது என்ற வேதனை கே.பாலசந்தருக்கு இருந்தது. அதற்காகவே ஒரு கதை எழுதி, இயக்கினார். அதுதான் ‘புன்னகை மன்னன்’. ’ஏக் துஜே கேலியே’வின் இறுதிக்காட்சி போன்ற அதே அமைப்பில்தான்,  ’புன்னகை மன்னன்’ ஆரம்பிக்கும். தற்கொலை முடிவல்ல என்ற கருத்தைச் சொல்லும். ‘ஏக் துஜே கேலியே’ வெற்றி என்றாலும், அந்தக் கருத்தை மக்களிடம் சொல்லியிருக்கக்கூடாது என்ற மனச்சுமையை ’புன்னகை மன்னன்’ மூலம் இறக்கி வைத்தார் கே.பாலசந்தர். 

அந்த மனம் தான்.. அந்த நேர்மைதான் அவர்!   

-ராஜி

(சினிமா விகடனில் வந்த கட்டுரை)

நீங்கள் ஏன் எழுத வேண்டும்??

நீங்கள் ஏன் எழுத வேண்டும். ???

கனமழை சென்னைவாசிகளுக்கு நினைவில் இருக்கும். பழைய மகாபலிபுரம் ரோட்டிலிருந்து இரவு 10மணிக்கு மேல் ஒரு செய்தி பரவியது. கனமழையின் இரண்டாம் நாளாது.

"அவசரமாக கால்நடை மருத்துவர் தேவை. பசு ஒன்று கன்று ஈன  முடியாமல் தவிக்கிறது. முடிந்தவரை பார்த்துவிட்டோம். மருத்துவர் உதவி அவசியம் தேவை. தெரிந்தவர்கள் உதவுங்கள்."  -செய்தி பல்வேறு வடிவில் காட்டுத்தீயாக பரவியது. நள்ளிரவு 12.30க்கு வேளச்சேரியில் இருந்து ஒரு மருத்துவர் கொட்டும் மழையில் நனைந்து சென்று பசுவையும் கன்றையும் காப்பாற்றினார்.

முந்தைய ஆண்டு, அண்ணா பல்கலைக்கழக நேர்முக தேர்விற்கு கோவை செல்ல வேண்டிய கிராம புற மாணவி, தவறுதலாக சென்னை வந்துவிட, காலையில் நடைபயிற்சி செல்லும் நண்பர்கள் மாணவியின் ஆர்வம், எடுத்துள்ள மதிப்பெண்கள் எல்லாம் கவனித்து விமானம் மூலம் கோவை அனுப்பி நிச்சயமாக கிடைக்கக்கூடிய கல்லூரி வாய்ப்பை மாணவிக்கு பெற்று தந்தனர்.

இரண்டு சம்பவங்களும் எழுத்தை பிரதானப்படுத்தியே முன்னெடுத்து செல்லப்பட்டது. வாசிப்பின் மூலமே பகிரப்பட்டது.

பசுவின் உரிமையாளருக்கும், கால்நடை மருத்துவருக்கும், உடன் உதவியவர்களுக்கும் எந்த ஒரு உறவும் கிடையாது, நட்பும் கிடையாது. சென்னையில் உதவிய நண்பர்களுக்கும், காரில் அழைத்து சென்று விமானம் ஏற்றிவிட்ட நண்பர்களுக்கும், கோவையில் சரியாக பிக்கப் செய்து கலந்துரையாடலில் கலந்துக் கொள்ள செய்த நண்பர்களுக்கும், நிலைமை எடுத்துரைத்து கலந்துரையாடலில் கலந்துக் கொள்ள உதவிய நண்பர்களுக்கும் எந்த உறவும் கிடையாது. முன்பின் அறிமுகமும் கிடையாது.

உதவிக் கொள்வதற்காக மட்டுமே எழுத வேண்டுமா? வாசிக்க வேண்டுமா? பகிர வேண்டுமா? என்றால் இல்லை. மெரினா போராட்டமாக இருக்கட்டும், அரசியல்வாதிகளின் கேடுகெட்ட நடத்தையின் வழக்கு தீர்ப்பாகட்டும் சமூகத்தின் மீதுள்ள கோவங்களை, ஆற்றாமைகளை எழுத்தில் கொட்டி தீர்க்கலாம். மெரினாவில் நடந்த போராட்டங்களும் எழுத்தின் ஊடே பயணப்பட்டு விஸ்வரூபமெடுத்தது. எழுதியே போராட்டம் நடத்தி வெகுண்ட எழுந்த மக்களைக் கண்டு சில வழக்குகளை தானாக முன்வந்து நீதிமன்றம் விசாரித்த வரலாறுகளும் இருக்கின்றன.

கன்னட எழுத்தாளர் ஹம்பி, பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் கல்புர்கி நேற்று சுட்டுக் கொல்லப்பட்ட பெண் பத்திரிகையாளர் கெளரி லங்கேஷ் மூலம் இந்த அரசாங்கம் நமக்கு எழுதுவதின் அவசியத்தை இன்னும் ஆணித்தரமாக சொல்லிக் கொண்டு இருக்கின்றன.

கழுத்தை நெறிக்கும் அதிகார வர்க்கத்தில் இருந்து தப்பிக்க ஒரே வழி பேனா எனும் ஆயுதம் ஏந்தி எழுதுவது ஒன்று தான்.

-ராஜி

ஒரு டயரி குறிப்பிலிருந்து....

12/4/1995 இரவு 11.22

அவனது நியாயம் எனக்குப் புரியவில்லை. தனது எந்த விசயத்திலும் நான் தலையிடக் கூடாதாம். அவன் எங்கு போனாலும், எப்போ வந்தாலும், யாரோடு சிரித்தாலும்  நான் பாராமுகமாய் இருக்க வேண்டுமாம். அவனுக்கான உணவைச் சமைத்து வைத்து விட்டு, அவனுடைய உடைகளையும் தோய்த்து, அயர்ண் பண்ணி வைத்து விட்டு அவனுக்காக வீட்டிலேயே காத்திருக்கவும் வேண்டுமாம்.
**************************

06/05/1995 காலை 2.28

அவன் எங்காவாது போய் தொலையட்டும். யார் கூட வேண்டுமானாலும் ஊர் சுற்றட்டும். வருவதற்கு இரண்டு நாளாகும் என சொல்லி விட்டு சென்று இருக்கலாம். சாப்பிட்டானா? தூங்கினானா? என்ன செய்துக் கொண்டு இருப்பான் என யோசிப்பதிலே என் நேரங்கள் கழிகிறது. சமயத்தில் பைத்தியம் பிடித்துவிடும் போல் இருக்கிறது.
***********************

10/06/1995 இரவு 10.30

இன்று வந்தான். முட்டைக் குழம்பும், அவனுக்கு பிடித்த கொத்தவரங்காய் பொரியலும், ரசமும், மீன் வறுவலும் வைத்திருந்தேன். கைகளில் அள்ளி பரிமாறி அவன் வயிறார உண்பதை பார்க்க வேண்டுமென ஆசை கொண்டு இருந்தேன். சாப்பிட்டு முடித்து கை கழுவும் தருணம் "நீ சாப்பிட்டியா?" ந்னு கேட்பான். அந்த வார்த்தைகளுக்கு காத்திருந்தேன். வந்தவன், " எனக்கு பசி இல்லை தூங்க போகிறேன்னு சொல்லிட்டு கதவை மூடி தாழிட்டு கொண்டான். இந்த உலகை எரித்து விடலாம் போல இருந்தது. பட்டினியோடு வரண்டாவில் அழுது தீர்த்தேன்.
********************

08/08/1995 காலை 4.00

நேற்று செம்பருத்தி பூ கொண்டு வந்திருந்தான். தலையில் வைத்து விட்டான். அழகாய் இருப்பதாக சொன்னான். கொஞ்சினான். எனக்கு மூன்றாம் நாள் என்றேன். வயிற்றில் உதைத்தான். மனசு வலித்தது.
***********

21/08/1995 இரவு 01.30

விடுமுறை என்றான். தலைசீவி விட்டான். உடைமாற்றி அழகு பார்த்தான். வெட்கத்தால் செத்தே போனேன்.
******************

16/09/1995 காலை 11.04

பிறந்த நாள் வாழ்த்து சொன்னான். முத்தமிட்டான். தலைமீது தூக்கி சுற்றி நெற்றியில் முத்தமிட்டான். பரிசு ஒன்றை பரிசளித்தான். பேசிக்கொண்டே சமைக்க தொடங்கினான். அவனை மட்டுமே பார்த்துக் கொண்டு இருந்தேன். பேசிக் கொண்டே இருந்தான். சமையல் முடித்து முதல் கவளம் எடுத்து ஊட்டினான். புரையேறியது எனக்கு. தண்ணீர் கொடுத்தான். "இன்னிக்கு என் பிறந்த நாள் இல்லையே என்றேன்". அசடு வழிந்து தலையை திருப்பி கேவலமாய் சிரித்து சமாளித்தான். ஆனால் அழகாய் இருந்தது.
*************
11/10/1995 மாலை 2.30

என் கோவங்களுக்கு எல்லாம் காரணம் மெனோபாஸ் பிரச்சனை தான் என்றான். எனக்கு வேறு பிரச்சனைகளே இருக்க கூடாதா?? அவனை கொல்ல வேண்டும் போல இருந்தது.
*************

22/10/1995 காலை 10.49

நிதனாமாக அவன் வேலையை பார்க்கிறான். எனக்கு தான் அவனை கடக்கும் போதெல்லாம் வயிற்றில் பட்டாம்பூச்சி பறக்கிறது.

ராக்கி - விதியின் விளையாட்டு

ஸ்டாலின் அப்போது தான் டியூசனுக்கு புதிதாக வந்து சேர்ந்தான். அவன் தம்பி எங்களுடைய க்ளாஸ் மேட். இவன் ஒரு வருடம் பள்ளி செல்லாததால் எங்களுடன்...