ஞாயிறு, 11 பிப்ரவரி, 2018

நினைவூட்டும் பால்யம்

அகந்தை, மேல்பூச்சு, பேச்சில் கர்வம் எதுவும் துளியுமில்லாத களையான முகம். சில சமயங்களில் காமம், காதல் எல்லாவற்றையும் தாண்டி நெருக்கமான பந்தத்தை ஏற்படுத்தி கொடுக்கும்.

நேற்றைய பொழுதில் இருசக்கர ஷோரூம் ஒன்றில் அவளை பார்த்தேன். கோஷா அணிந்திருந்தாள். கறுப்பு நிற நட்சத்திரங்கள் பொதிந்த, அழகான வேலைப்பாடுகள் கொண்ட கோஷா. அவளுக்கு அவ்வளவு பொறுத்தமாய் இருந்தது. அவளின் கோதுமை நிற உடலில் கறுப்பு நிற கோஷாவும், வெளீர் நிறத்தில் நீல பூ பதிந்த மேலாடைகளும் அவளை தேவதையாக நிறுத்தியது.

அவளின் ஒவ்வொரு உச்சரிப்பிலும் ஒரு "க்" அல்லது "ஞ்" என முடிவது அவளின் பேச்சினை கேட்க தூண்டியது. தங்க நிறத்திலான அவளின் பற்கள் புன்னகையை வீசியப்படியே இருந்தது. கறுப்பு மையிட்டு இன்னும் அழகாக இருந்தாள்.

வலதும் இடதுமாக விழிகளை உருட்டும் அவள் கண்களில் எதிர்காலம் பற்றியோ நிகழ்காலம் பற்றியோ துளியளவும் கவலைகள் இருந்ததாக தெரியவில்லை. குழந்தைதனமும், மேட்டிமைதனமும் இல்லாத கலவையான முகவெட்டு. இளமை சில சமயம் எவ்வளவு அழகாய் இருக்கிறது.

காகிதத்தை எடுத்து அவள் எழுதும் போது இடக்கையை பயன்படுத்தினாள். எந்தவொரு சுவாரசியமும் ஏற்படுத்தாத அவளின் பேச்சினை மறந்து அவள் எழுதுவதை பார்த்துக் கொண்டு இருந்தேன். எழுத்து அவ்வளவு மோசமில்லை. எண்களில் சுழிப்பை அழகாக்கினாள். வார்த்தைகளில் எழுத்துக்களை அழகாக்கினாள். சூழ்நிலைகள் தானாகவே அழகாக மாறியதாய் தோன்றியது.

இந்த பக்கம் கண்களில் யாரோ ஊடுருவதாய் நினைவு. கனவு கணங்களில் இருந்து நிஜத்திற்கு திரும்பி, என்ன நடக்கிறது என்பதை யூகிக்கிறேன். அம்மு பார்வையால் என்னை அளந்துக் கொண்டு இருந்தாள்.

ஷோ ரூம் விட்டு வெளியே வந்ததும் முதல் கேள்வி அவளிடமிருந்து வந்தது.

"எதற்கு அவளை அப்படி பார்த்த?"

சிரித்துக் கொண்டேன். "சொன்னால் உனக்கு புரியுமா?" என்றேன்.

அமைதியாக பார்த்துக் கொண்டு இருந்தாள். சிறுவயது புகைப்படமொன்றை நினைவூட்டினேன். நாற்காலி ஒன்றில் இடது காலின் மேல் வலது காலை முறுக்கி உட்கார்ந்து இருந்த நிழற்படம். துப்பட்டாவை கழுத்தை லேசாக சுருக்கி இருக்கும். உதடுகளில் புன்னகையும் கண்களில் அசாத்திய நம்பிக்கையும் கொண்ட பார்வையும்... முகம் பூரித்து இருந்ததையும் சொல்லிக் கொண்டு இருந்தேன்.

"இப்போ அதுக்கெல்லாம் என்ன?" என்றாள். வார்த்தைகளில் வெட்கம் கூடி உருண்டு ஓடிக் கொண்டு இருந்தது.

"குழந்தைதனமும், மேட்டிமைதனமும் இல்லாத அந்த முகம் கிரகணத்திற்கு பிறகான அழகான சந்திரன்.  சட்டென யாராவது உன் முகத்தை நினைவுப்படுத்தி விடுகிறார்கள். இந்த நிமிடங்கள் தான் எவ்வளவு அழகானவை. உன் பால்ய நிழற்படத்தை போல" என்றேன்.

திரும்பி நின்று, "நேரமாகிறது போகலாம்" என்றவள் லேசாக சிரித்து வெட்கத்தில் பால்யத்தை தொட்டு இருக்ககூடும்.

-ராஜி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ராக்கி - விதியின் விளையாட்டு

ஸ்டாலின் அப்போது தான் டியூசனுக்கு புதிதாக வந்து சேர்ந்தான். அவன் தம்பி எங்களுடைய க்ளாஸ் மேட். இவன் ஒரு வருடம் பள்ளி செல்லாததால் எங்களுடன்...