புதன், 7 பிப்ரவரி, 2018

ஒரு டயரி குறிப்பிலிருந்து....

12/4/1995 இரவு 11.22

அவனது நியாயம் எனக்குப் புரியவில்லை. தனது எந்த விசயத்திலும் நான் தலையிடக் கூடாதாம். அவன் எங்கு போனாலும், எப்போ வந்தாலும், யாரோடு சிரித்தாலும்  நான் பாராமுகமாய் இருக்க வேண்டுமாம். அவனுக்கான உணவைச் சமைத்து வைத்து விட்டு, அவனுடைய உடைகளையும் தோய்த்து, அயர்ண் பண்ணி வைத்து விட்டு அவனுக்காக வீட்டிலேயே காத்திருக்கவும் வேண்டுமாம்.
**************************

06/05/1995 காலை 2.28

அவன் எங்காவாது போய் தொலையட்டும். யார் கூட வேண்டுமானாலும் ஊர் சுற்றட்டும். வருவதற்கு இரண்டு நாளாகும் என சொல்லி விட்டு சென்று இருக்கலாம். சாப்பிட்டானா? தூங்கினானா? என்ன செய்துக் கொண்டு இருப்பான் என யோசிப்பதிலே என் நேரங்கள் கழிகிறது. சமயத்தில் பைத்தியம் பிடித்துவிடும் போல் இருக்கிறது.
***********************

10/06/1995 இரவு 10.30

இன்று வந்தான். முட்டைக் குழம்பும், அவனுக்கு பிடித்த கொத்தவரங்காய் பொரியலும், ரசமும், மீன் வறுவலும் வைத்திருந்தேன். கைகளில் அள்ளி பரிமாறி அவன் வயிறார உண்பதை பார்க்க வேண்டுமென ஆசை கொண்டு இருந்தேன். சாப்பிட்டு முடித்து கை கழுவும் தருணம் "நீ சாப்பிட்டியா?" ந்னு கேட்பான். அந்த வார்த்தைகளுக்கு காத்திருந்தேன். வந்தவன், " எனக்கு பசி இல்லை தூங்க போகிறேன்னு சொல்லிட்டு கதவை மூடி தாழிட்டு கொண்டான். இந்த உலகை எரித்து விடலாம் போல இருந்தது. பட்டினியோடு வரண்டாவில் அழுது தீர்த்தேன்.
********************

08/08/1995 காலை 4.00

நேற்று செம்பருத்தி பூ கொண்டு வந்திருந்தான். தலையில் வைத்து விட்டான். அழகாய் இருப்பதாக சொன்னான். கொஞ்சினான். எனக்கு மூன்றாம் நாள் என்றேன். வயிற்றில் உதைத்தான். மனசு வலித்தது.
***********

21/08/1995 இரவு 01.30

விடுமுறை என்றான். தலைசீவி விட்டான். உடைமாற்றி அழகு பார்த்தான். வெட்கத்தால் செத்தே போனேன்.
******************

16/09/1995 காலை 11.04

பிறந்த நாள் வாழ்த்து சொன்னான். முத்தமிட்டான். தலைமீது தூக்கி சுற்றி நெற்றியில் முத்தமிட்டான். பரிசு ஒன்றை பரிசளித்தான். பேசிக்கொண்டே சமைக்க தொடங்கினான். அவனை மட்டுமே பார்த்துக் கொண்டு இருந்தேன். பேசிக் கொண்டே இருந்தான். சமையல் முடித்து முதல் கவளம் எடுத்து ஊட்டினான். புரையேறியது எனக்கு. தண்ணீர் கொடுத்தான். "இன்னிக்கு என் பிறந்த நாள் இல்லையே என்றேன்". அசடு வழிந்து தலையை திருப்பி கேவலமாய் சிரித்து சமாளித்தான். ஆனால் அழகாய் இருந்தது.
*************
11/10/1995 மாலை 2.30

என் கோவங்களுக்கு எல்லாம் காரணம் மெனோபாஸ் பிரச்சனை தான் என்றான். எனக்கு வேறு பிரச்சனைகளே இருக்க கூடாதா?? அவனை கொல்ல வேண்டும் போல இருந்தது.
*************

22/10/1995 காலை 10.49

நிதனாமாக அவன் வேலையை பார்க்கிறான். எனக்கு தான் அவனை கடக்கும் போதெல்லாம் வயிற்றில் பட்டாம்பூச்சி பறக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ராக்கி - விதியின் விளையாட்டு

ஸ்டாலின் அப்போது தான் டியூசனுக்கு புதிதாக வந்து சேர்ந்தான். அவன் தம்பி எங்களுடைய க்ளாஸ் மேட். இவன் ஒரு வருடம் பள்ளி செல்லாததால் எங்களுடன்...