திங்கள், 5 பிப்ரவரி, 2018

நரகத்திலிருந்து பயணப்பட்டவன்- பாகம் -1

நரகத்திலிருந்து நான் பயணப்பட்டு இருக்கிறேன். மூன்று ஜாமங்களுக்கு முன்பு தொடங்கிய இந்த பயணம் சற்று முன் தான் பூமியை வந்தடைய நேரிட்டது. இங்கே எனக்கு என்ன வேலை? ஏன் நரகத்தை விட்டு விலகினேன் என்பது எல்லாம் பெரிய ரகசியம் ஒன்றுமில்லை. என் காதலி அதாவது நான் காதலித்தவள் இங்கு தான் இருக்கிறாள். அவளை தேடி தான் பயணப்பட்டு இருக்கிறேன்.

பூமியில் நான் இறங்கிய இடம் இராணுவ எல்லை என்றார்கள். எனக்கு தெரிந்து அங்கு நான் எந்த ராணுவ வீரனையும் பார்க்கவில்லை. எல்லை என்றால் முள்வேலி போட்டு துப்பாக்கி தூக்கி குறுக்கும் மறுக்கமாக நடப்பார்கள் என்ற கற்பனை எனக்கும் இருந்தது. உண்மையில் அங்கு அப்படி எதுவுமில்லை. மெல்லிய நூல் கூட கட்டி வைக்கவில்லை. பின்பு எல்லையை எப்படி தீர்மானிப்பார்கள் என்பது எனக்கு குழப்பமாக இருந்தது. தூரத்தே நடந்து வந்தவரிடம் விசாரிக்க முற்பட்ட பொழுது, அவர் என் குல கோத்திரங்களை விசாரிக்க ஆரம்பித்தார்.

நரகத்தில் இருந்து வருகிறேன் என்பதை அவரால் நம்ம முடியவில்லை. அவரது கைகள் மறைத்து வைக்கப்பட்டு இருந்த துப்பாக்கியின் விசையில் தவம் செய்துக் கொண்டு இருந்தது.

அவசரப்பட்டு சுட்டு விடாதீர்கள், நான் என் காதலியை தேடி, அதாவது நான் காதலிப்பளை தேடி வந்திருக்கிறேன் என கூறிக் கொண்டு இருக்கும் போதே என் பின்னந்தலை பிடறியில் ஒன்றும் முதுகுபுறத்தில் ஒன்றுமாய் இரண்டு துப்பாக்கிகள் துளைத்து நின்றன. ராணுவ வீரர்களாம். எங்கிருந்து வந்தார்கள் என்பதை எல்லாம் ஆராய்ச்சி செய்ய எனக்கு கால அவகாசமில்லை. தற்போதைய தேவை உயிரைக் காப்பாற்றிக் கொள்வது.

உங்களிடம் இரண்டு கேள்விகளை கேட்கிறேன் சரியாக பதிலளித்தால் என்னை சுட்டு விடலாம், இல்லையெனில் நான் காதலிப்பவளை தேடிப் போக என்னை அனுமதிக்க வேண்டுமென்று பேச்சுவார்த்தை நடத்தி வென்று விட்டேன்.

முதல் கேள்வியை கேட்க ஆயுத்தமாகும் போது, சீக்கிரம் கேள் என்று பின்னாடி இருந்த ஒருவன் கத்தினான்.

”காலம் கடந்த பழைய ஞாபகங்களில் தான் எங்களுக்கான நரகமிருக்கிறது. இப்போது நான் அறைக்குள் இருக்கிறேன். கதவு தட்டும் ஓசை கேட்கிறது. கதவை தட்டுவது யார்?” என்றேன்.

பின்னாடி நின்றவன் சாத்தான் என்று முடிக்கும் முன்னே முன்னாடி நின்றவன் கடவுள் என்றான்.

இரண்டாவது கேள்வியை கேட்க தொடங்கினேன்.

“காரணமில்லாமல் இறுகிப்போனோம் உயிரோடு உயிராய் கலந்துப் போனோம். காலத்தின் பிணைக்கைதிகள் பிரித்தாளும் சூழ்ச்சியில் வெல்ல போவது யார்?” என்றேன்.

உன்னவளை தேடிக் கிளம்பு என்றார்கள். போகும் போது பதில் சொல்லிட்டு போ... என்றார்கள்.

பதில் சொல்லி விட்டீர்கள் என்றால் இதோ இவர்களிடமிருந்து கிளம்பிவிடுகிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ராக்கி - விதியின் விளையாட்டு

ஸ்டாலின் அப்போது தான் டியூசனுக்கு புதிதாக வந்து சேர்ந்தான். அவன் தம்பி எங்களுடைய க்ளாஸ் மேட். இவன் ஒரு வருடம் பள்ளி செல்லாததால் எங்களுடன்...